24 பயனாளிகளுக்கு ரூ.11.34 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.11.34 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்கள் மூலமாக கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இன்று (11.08.2025) வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் மாவட்ட ஆட்சித்தலைவராக 27.06.2025 அன்று பொறுப்பேற்ற நாள் முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் ஒவ்வொரு கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டு வருகிறார். குறிப்பாக தாய், தந்தை இழந்து அல்லது மிக வறுமை நிலையில் கல்லூரி கட்டணம் கூட செலுத்த இயலாமை நிலையில் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியின் மூலம் கல்லூரி கட்டணம் செலுத்தும் வகையில், கல்வி உதவித்தொகையினையும், வாழ்வாதாரமின்றி வறுமை நிலையில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பல்வேறு முகாம்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஆகியோர்களிடம் பொதுமக்கள் நேரடியாக வழங்கும் மனுக்கள் மீது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு அம்மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அதன்படி இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், 2 மகளிர் பயனாளிகளுக்கு தலா ரூ.1,00,000 உதவித் தொகையுடன் ஆட்டோக்களும், 1 பயனாளிக்கு ரூ.7,000 கல்வி உதவித் தொகையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.8,15,000 மதிப்பில் சுய தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி, உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1,99,365 மதிப்பில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கான மானிய உதவியும், 4 பயனாளிகளுக்கு ரூ.3,932 மதிப்பில் வரகு, கம்பு, உளுந்து விதைகள் மற்றும் சிறுதானிய விதை நுண்ணுயிர் உரம், வருவாய்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.90,000 மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.12,035 மதிப்பில் உதவி உபகரணங்கள் மற்றும் அடையாள அட்டை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.6,500 மதிப்பீட்டில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் இலவச பாடக்குறிப்புகள், மீனவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு மீனவர் நல வாரிய அட்டை என மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.11,33,832 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இதில் காதொலி கருவி பெற்ற இந்திராணி என்பவர் கூறுகையில், காது கேட்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாகவும், எனவே எனக்கு காதொலி கருவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்ததாகவும், மனு கொடுத்த 30 நிமிடத்திற்குள் காதொலி கருவி புதிதாக மாவட்ட ஆட்சித்தலைவரே வழங்கியதாகவும், இதன் மூலமாக தற்போது காது சரியாக கேட்பதாகவும் தெரிவித்தார். வயதான காலத்தில் காதொலி கருவி எனக்கு வழங்கி என் கஷ்டத்தை நீக்கிய கலெக்டருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும், நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி அருண்குமார் அவர்கள் கூறுகையில், அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர் நலவாரியத்தின் உறுப்பினராக உள்ளதாகவும், சொந்தமாக ஆட்டோ வாங்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்தாலும் போதிய வசதியின்மை காரணமாக ஆட்டோ வாங்க முடியாமல் இருந்த நிலையில் தொழிலாளர் நல வாரியம் மூலமாக மகளிர் ஆட்டோ மானியம் மூலமாக ரூ.1 லட்சம் நிதி உதவி கிடைக்கப்பெற்று புதிய ஆட்டுப வாங்கி இன்று முதல் ஆட்டோ ஓட்டுநராகவும், வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்ததாகவும், வாய்ப்பை ஏற்படுத்தி தந்த்தற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். செல்வி யோகபிரியா கூறுகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தில் குரூப் 2ஏ இலவச பயிற்சி பயின்றதாகவும், இம்மையத்தில், போட்டித்தேர்வுகளுக்கான இலவச கையேடுகள் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டதன் மூலமாக குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று, கூட்டுறவுத்துறையில் முதுநிலை ஆய்வாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இலவச பயிற்சி வழங்கி எனது வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வழிவகை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சக்திவேல், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) மு.பாஸ்கரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





