சேலம் மாநகராட்சிக்கு ரூ.748 கோடியில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம்

சேலம் மாநகராட்சிக்கு ரூ.748 கோடியில் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம்
தமிழக பட்ஜெட் கடந்த 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் சேலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி கூட்டத்தில் பேசிய அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, சேலம் மாநகராட்சியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் வழப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோருக்கு கவுன்சிலர்கள் சார்பில் பாராட்டு தெரிவித்துக்கோள்கிறோம் என்றார்.
இதேபோன்று கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன் பேசும் போது, அரசு பஸ்களுக்கு வாட்டர் சர்வீஸ் மற்றும் டீசல் நிரப்புவதற்கு எப்படி அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளதோ, அதே போல் சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களுக்கு டீசல் நிரப்பவும், வாட்டர் சர்வீஸ் செய்வதற்கும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கும் 24 மணி நேரம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுத்த மேயர், ஆணையாளருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இதே போன்று கவுன்சிலர்கள் சாந்தமூர்த்தி, தமிழரசன் உள்ளிட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் பாராட்டி பேசினர். இதுகுறித்து ஆணையாளர் பாலச்சந்தரிடம் கேட்ட போது சேலம் மாநகராட்சிக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.748 கோடி நிதி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதனால் மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மக்களுக்கு குடிநீர் கட்டணம் குறையும். அதே போன்று குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு தண்ணீர் வழிந்தோடும் இடங்கள் உடனுக்குடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
