24 மணிநேர மது விற்பனை : சீரழியும் கணவர்கள் - மனைவிகள் கண்ணீர் மனு
மனு அளிக்க வந்த பெண்கள்
காட்டு நாயக்கன்பட்டி கிராமத்தில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கக்கோரி அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர்.
தேனி அருகே வீரபாண்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட பெண்கள் தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர். இந்த மனு குறித்து பெண்கள் கூறுகையில், காட்டு நாயக்கன்பட்டி கிராமத்தில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நள்ளிரவு நேரத்தில் சென்றாலும் கூட தாராளமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக எங்கள் வீட்டு கணவர்மார்கள் மது போதைக்கு அடிமையாகி குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் கள்ளக்குறிச்சி போன்ற நிலை ஏற்படும் அபாயம் உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினர். கணவர்களின் மது பழக்கத்திற்கு காரணமான சட்ட விரோத மது விற்பனை தடுக்க மனைவியர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story