நீலகிரிக்கு வந்த 240 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி (108) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 239 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 வி.வி.பேட்., கருவி, கூடலூர் (109) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 224 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 268 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 291 வி.வி.பேட்., கருவி, குன்னூர் (110) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 226 வாக்குச்சாவடி மையங்களுக்கு, 271 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 293 வி.வி.பேட்., கருவி என நீலகிரி மாவட்டத்திலுள்ள 689 வாக்குச்சாவடி மையங்களுக்கு 825 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 894 வி.வி.பேட்., கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்தலையொட்டி முதற்கட்டமாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் சீரற்றமயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டு, ஊட்டி பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் புனித தாமஸ் உயர்நிலைப்பள்ளி, குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் நேரத்தில் மண்டல குழுக்கள் அதனை வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வார்கள் என்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நீலகிரியில் 16 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பதிவு இடம்பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது. பொதுவாக 15 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பதிவுக்கு ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் போதுமானது.
ஆனால் நீலகிரியில் 16 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பதிவு இருப்பதால், கடைசியில் இடம்பெற உள்ள ஒரு நோட்டா பதிவுக்காக 3 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய நீலகிரி மாவட்டத்தில் 689 வாக்குச்சாவடி மையங்களுக்கும் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து முதல் கட்டமாக கூடுதலாக 240 வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நீலகிரி மாவட்டம் ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த இயந்திரங்களை பெல் நிறுவன அதிகாரிகள் விரைவில் அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் சோதனை செய்ய உள்ளனர்.