25 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட ரயில் நிலையம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா .?

சிவகங்கை அருகே 25 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே 25 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட நாட்டரசன்கோட்டை ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பேரூராட்சி பகுதியில் 10,000 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நாட்டரசன்கோட்டையை சுற்றி கொல்லங்குடி திருவேலங்குடி, காளையார்மங்கலம், கவுரிபட்டி, முத்தூர், கண்டுப்பட்டி, கண்டனிப்பட்டி, கீரனூர், காளையார்கோவில், பனங்காடி, அல்லூர் உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 2 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன இதில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கிருந்து காரைக்குடி, சிவகங்கை, மதுரை, காளையார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இங்குள்ள பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் நகரத்தார் மக்களால் நடத்தப்படும் செவ்வாய் பொங்கல் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்லாகும். மேலும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் அதிஷ்டானம், செட்டிநாடு கலாசாரம் மற்றும் கலைவண்ணத்தில் மிளிரும் மிகப்பெரிய வீடுகளைக் காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய சுற்றுலாத் தலமாகவும் நாட்டரசன்கோட்டை திகழ்கிறது. இங்கு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1937 -ஆம் ஆண்டு ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. நீராவி என்ஜின் ரயில்கள் இத்தடத்தில் தனுஷ்கோடிக்கு செல்லும் பொழுது இங்குள்ள பெரிய கிணற்றிலிருந்து நீராவி என்ஜினுக்குத் தேவையான தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கிறது. ரயில்வே துறைக்கு சம்பந்தப்பட்ட தளவாட பொருட்கள் கிடங்கும் இருந்திருக்கிறது. இங்கு ரயில்வே ஊழியர் தங்குவதற்கான குடியிருப்புகள் மற்றும் நிலைய அதிகாரி தங்குவதற்கான வீடும் இருந்துள்ளன. இந்த ரயில் நிலையத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில் மற்றும் பயணிகள் ரயில்களும் நின்று சென்றிருக்கின்றன. பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் இங்குள்ள நகரத்தார் உள்ளிட்டோர் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வணிகம் செய்வதற்காக இந்த ரயில் நிலையத்திலிருந்துதான் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1999 -ஆம் ஆண்டு இந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. நாளடைவில் இங்குள்ள குடியிருப்புகள் மற்றும் கிணறுகள் சிதிலமடைந்து போனது. தற்போது திருச்சி-ராமேஸ்வரம் ரயில் தடத்தில் 10 -க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கி வருகின்றன. ரயில் பயணம் வயதானவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான பயணமாக பார்க்கப்படுகிறது. இச்சூழ்நிலையில் சிதிலமடைந்து கிடக்கும் இந்த நிலையத்தை மீண்டும் திறந்து ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத்தரப்பினரும் கோருகின்றனர். எனவே மூடப்பட்ட ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story