25 கிலோ மூட்டை அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும்

X
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன மாநில பொதுக்குழு கூட்டம், சேலம் செவ்வாய்ப்பேட்டை நெல் அரிசி உணவுப்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க பொன்விழா ஆண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சேலம் சோளம்பள்ளம் டி.எஸ்.கே. திருமண மகாலில் நடந்த கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் டி.துளசிங்கம் தலைமை தாங்கினார். செவ்வாய்ப்பேட்டை நெல் அரிசி உணவுப்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் கே.பி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் கே.ரத்தினவேல் வரவேற்று பேசினார். மாநில சம்மேளன செயலாளர் டாக்டர் மோகன், சம்மேளன செயல்பாடுகள் குறித்தும், மாநில சம்மேளன பொருளாளர் வி.டி.கணேச அருணகிரி நிதிநிலை குறித்தும் அறிக்கை வாசித்தனர். விழாவில் மாநில சம்மேளனம் மற்றும் சங்க நிர்வாகிகள் இன்றைய சூழ்நிலையில் உணவுப்பொருள் வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். விழாவில் செவ்வாய்ப்பேட்டை நெல் அரிசி உணவுப்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க பொருளாளர் வி.சுப்ர மணியம், உதவித்தலைவர் எஸ்.சீனிவாசன், உதவி செயலாளர் என்.ராஜேஷ், செயற்குழு உறுப்பினர்கள் வி.பாஸ்கரன், முரளி, தியாகராஜன், சுரேஷ்பாபு, பாலமுரளி மற்றும் மாநில சம்மேளனம் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் வி.சுப்ரமணியம் நன்றி கூறினார். விழாவில் 25 கிலோ மூட்டை மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் அரிசிக்கு மத்திய அரசு விதித்துள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும். எண்ணெய் ஆலைகளுக்கு அரிசி ஆலையில் இருந்து அனுப்பும் தவிடுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு நெல்லுக்கு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மட்டுமே சந்தை கட்டணத்தை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story

