விதிமுறைகளை மீறிய 25,582 ரயில் பயணிகளுக்கு அபராதம்
ரயில்வே
ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதையும், முறைகேடாக பயணம் செய்வதை தடுக்கவும் தொடர் சோதனைகளை நடத்திட, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, ரெயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையில் டிக்கெட் பரிசோதகர் குழுவினர் ரெயில்களில் தொடர்ந்து சோதனை நடத்தி, ரெயில்களில் விதிகளை மீறிய பயணிகளுக்கு அபராதம் வசூலித்தனர்.
இதையொட்டி கடந்த மாதம் சேலம் ரெயில்வே கோட்ட பகுதியில் ரெயில்களில் சுமார் 5,500 அதிரடி சோதனைகளை டிக்கெட் பரிசோதகர்கள் குழுவினர் நடத்தினர். இந்த சோதனை மூலம் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 14 ஆயிரத்து 213 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 21 லட்சத்து 11 ஆயிரத்து 61 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்த 11 ஆயிரத்து 327 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.60 லட்சத்து 91 ஆயிரத்து 440 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் ரெயில்களில் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்து சென்றவர்கள் என 42 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 448 வசூலிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது, முறைகேடான பயணம், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்து கொண்டு சென்றது என மொத்தம் 25 ஆயிரத்து 582 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 82 லட்சத்து 24 ஆயிரத்து 989 அபராதம் வசூலிக்கப்பட்டது.