பனியன் நிறுவன ஊழியர் வீட்டில் 27 சவரன் நகை திருட்டு
காவல் நிலையம்
திருப்பூர், தேவராயம்பாளையம், செர்ரி பிளாசம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வித்யாசாகர் (47). இவர் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் மெர்ச்சண்டைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வித்யாசாகரின் வீட்டிற்கு அவருடைய தந்தை சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கம் வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உதவி கமிஷனர் நல்லசிவம், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் வித்யாசாகர் தனது வீட்டிற்குள் செயின், கம்மல், நெக்லஸ், ஆரம் உள்ளிட்ட 27 சவரன் தங்கநகைகளை வைத்துவிட்டு திருப்பதிக்கு சென்றதும். மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகையை திருடி சென்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றி விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து வித்யாசாகர் திருப்பதியில் இருந்து வந்த பின்னர் தான் முழுமையான விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.