மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 279 மனுக்கள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப் 19ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், எந்த ஒரு வேலையும் செய்ய இயலாத நிலையில் வாழ்வாதாரத்திற்கே பொருளீட்ட இயலாத நிலையில் உள்ள 8 நபர்களுக்கு தற்காலிக இயலாதோர் உதவித்தொகைக்கான ஆணையினையும், 02 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 279 மனுக்கள் பெறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீரமலை, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.