சங்கம் விடுதியில் 2வது நாளாக விசாரணை

சங்கம் விடுதியில் 2வது நாளாக விசாரணை நடைபெறுவந்த நிலையில் 3 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சி குருவண்டான் தெருவில் ஆதிதிராவிடர் காலனி மக்கள் பயன்பாட்டிற்காக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கால்நடை கழிவு கிடந்ததாக கடந்த மாதம் 25ம் தேதி புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடந்த விசாரணை மற்றும் ஆய்வில், நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் உருவான பாசிதான் பச்சை நிறத்தில் படர்ந்திருக்கலாம் என தெரியவந்தது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாகநிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே தண்ணீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம் மற்றும் சில டீக்கடைகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து ஜூன் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் நேற்று முன்தினம் காலை சங்கம்விடுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கிராமத்தை சேர்ந்த 3 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Tags

Next Story