திருத்தணியில் 2வது மலைப்பாதை பணி - வனத்துறைக்கு 14 ஏக்கர் மாற்றம்

திருத்தணியில் 2வது மலைப்பாதை பணிக்காக கையப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மாற்றாக 14 ஏக்கர் புறம்போக்கு நிலம் வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். வாகனங்கள் செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஒரே ஒரு மலைப்பாதை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அரசு விடுமுறை நாட்கள், முக்கிய திருவிழாக்கள் மற்றும் திருமண முகூர்த்த நாட்கள் ஆகிய நாட்களில் வழக்கத்திற்கு மாறாக லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வருகின்றனர்.

இதில் பெரும்பாலான பக்தர்கள் ஆட்டோ, கார், வேன், பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் மலைக்கோவிலுக்கு சென்று ஒரே பாதையில் திரும்புவதால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் கோவில் நிர்வாகம், மேல்திருத்தணியில் இருந்து மலைக்கோவிலுக்கு இரண்டாவது மலைப்பாதை ஏற்படுத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான நிதியுதவி தயாராக உள்ள நிலையில் பாதை ஏற்படுத்துவதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அப்போது, வனத்துறையினருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியது. இதற்கு பதிலாக மாவட்ட வருவாய் துறையினர் வனத்துறையினருக்கு அரசு நிலம் வழங்க தீர்மானித்து, திருத்தணி ஒன்றியம் அலுமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள மலை புறம்போக்கு நிலம், 14 ஏக்கர் வனத்துறை பெயருக்கு நிலமாற்றம் செய்யப்பட்டது. இப்பணிகளை நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, கோவில் இணை ஆணையர் ரமணி, தாசில்தார் மதியழகன், திருத்தணி வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Tags

Next Story