ரூ.3 கோடியில் புதிதாக 3 நவீன தீயணைப்பு வாகனங்கள்!

X
தூத்துக்குடியில் புதிதாக சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 3 தீயணைப்பு வாகனங்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டன. தமிழகத்தில் அதிக தொழிற்சாலை உள்ள மாவட்டங்களில் ஒன்றாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு துறைமுகம், அனல் மின் நிலையங்கள், உர தொழிற்சாலை உள்ளிட்ட கனரக தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் ஆபத்தான பொருட்கள் அதிக அளவில் கையாளப்படுகின்றன. பாதுகாப்பாக தொழிற்சாலைகள் இயங்கி வந்தாலும் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த தீ விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதையும், ஏற்பட்டு வரும் திடீர் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காகவும் கூடுதலாக இரண்டு நுரையுடன் தண்ணீர் வெளியேறி தீயை அணைக்கும் வாகனம் உட்பட 3 தீயணைப்பு வாகனங்கள் தூத்துக்குடிக்கு வந்து உள்ளன. சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான இந்த வாகனங்கள் நேற்று மாலை இயக்கி சோதனை செய்யப்பட்டன. இதனை தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி தீயணைப்பு அலுவலர் நட்டார் ஆனந்தி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு அலுவலர் கணேசன் கூறும் போது, நுரையுடன் கூடிய தண்ணீரை வெளியேற்றி தீயை கட்டுப்படுத்தும் வாகனம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த புதிய வாகனத்தில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர், 1000 லிட்டர் நுரை திரவம் நிரப்ப முடியும். இதன் மூலம் தேவைப்பட்டால் அதிக நேரம் தீயை அணைக்க வாகனத்தை இயக்க முடியும். எண்ணெய் தீ விபத்து போன்றவற்றை அணைப்பதற்கு இந்த வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நவீன உபகரணங்களும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக உடன்குடியில் ஒரு தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது என்று கூறினார்.
Next Story

