3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்த அமைச்சர் மா.மதிவேந்தன்!!

3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்த அமைச்சர் மா.மதிவேந்தன்!!
X
அனைவரும் வாசிக்க வேண்டும்” ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ நாமக்கல் மாவட்ட 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்து பேச்சு.
நாமக்கல் மாநகராட்சி, பரமத்தி சாலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , மேயர் து.கலாநிதி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.இராஜேஸ் கண்ணன், ஆகியோர் முன்னிலையில் 3-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அதில் சிறப்பான முன்னெடுப்பாக அனைவரும் பயில வேண்டும். அனைவரும் வாசிக்க வேண்டும் என்ற புதுமையான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், சென்னையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் பலர் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி படித்து சிறப்பித்தார்கள். இன்றைய உலகில் செல்போனில் மட்டுமே நேரத்தை செலவழிக்காமல் புத்தக வாசிப்பு அனைவரிடமும் சிறப்பாக உள்ளது என்பதை அறிந்து கொண்டு, மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி அமைக்க திட்டமிடப்பட்டு சிறப்பாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் 3-ஆம் ஆண்டு மாபெரும் ”புத்தகத் திருவிழா” மிகச்சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. ஒரு புத்தகத்தை எழுதும் ஆசிரியர் பல மாதங்கள் ஆண்டுகளில் தனது அனுபவங்களை உள்ளடக்கி தான் புத்தகத்தை எழுதி இருப்பார். புத்தகங்களை நாம் ஒரு சில நேரங்களில் படிக்கும் போது அந்த ஆசிரியரின் அனுபவங்களை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும், புத்தகம் வாசிப்பதால் புதிய சொற்கள், வாக்கியங்கள் கற்று கொள்ள முடியும். இதன் மூலம் நாம் பிறருடன் நல்ல முறையில் உரையாட முடியும். பொது இடங்களில் பேச நல்ல வாய்பாக அமையும். நம் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் சிறந்த மாற்றங்களை நாம் உணர முடியும். மேலும், ஒழுக்கம் மேம்படும். நம்மை நாமே உயர்த்தி கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாம் சந்திக்கும் நபர்களுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை வழங்க அறிவுறுத்தினார்கள். சிறை சாலைகளில் உள்ள கைதிகள் கூட புத்தகங்களை படித்து வெளி வரும் போது ஞானிகளாக வருகின்றார்கள். எனவே, அனைவரும் புத்தக வாசிப்பை மேம்படுத்தி கொள்ள வேண்டும். அனைவரும் வாசிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் 3-ஆம் ஆண்டு மாபெரும் ”புத்தகத் திருவிழா” இன்று 1.2.2025 முதல் 10.02.2025 வரை 10 நாட்கள் பரமத்தி சாலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இப்புத்தக திருவிழாவானது 80-க்கும் மேற்பட்ட அரங்குகள், 20 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசு துறைகளின் பணி விளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 1.2.2025 இன்று முதல் 10.02.2025 வரை தினசரி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பாட்டு போட்டி, மாறுவேடப் போட்டி, நாடகப்போட்டி, படம் பார்த்து கதை சொல்லுதல், வினாடி வினா, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் மருத்துவ முகாம், பல்வேறு அரசுத்துறை சார்ந்த அரங்குகள், உணவு அரங்குகள் ஆகியவை இடம் பெறவுள்ளன. தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.முன்னதாக, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி இயக்குனர் எஸ்.குருவாயூரப்பன் ”வாசிப்பை நேசி” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்கள். மேலும், நாமக்கல் மாவட்ட நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் சார்பில் மங்கள இசை நிகழ்ச்சியும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.02.02.2025 அன்று டாக்டர்.கலியமூர்த்தி, (ஓய்வு) ”நல்ல வண்ணம் வாழலாம்” என்ற தலைப்பிலும், மருத்துவர் இரா.குழந்தைவேல் ”தமிழால் இணைவோர் தமிழராய் வாழ்வோம்” என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள். தண்ணீர் பந்தல் காடு தேவர் பூங்கரகம் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சே.பூபதி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) மா.க.சரவணன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி மாவட்ட நூலக அலுவலர் (பொ) ச.தேன்மொழி, சேகோ சர்வ் மேலாண்மை இயக்குநர் கீர்த்தி பிரியதர்ஷினி, அறங்காவலர் குழுத்தலைவர் நல்லுசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story