ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
கைது
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு தேர் திருவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் இருந்து சின்னஊனை கிராமத்தை சேர்ந்த சோமு என்பவரது மகன் பிரேம்குமார் (24) என்பவர் ஆம்புலன்சை ஓட்டி வந்தார்.
அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் எதிரே சில வாலிபர்கள் சாலையில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் டிரைவர், ஓரமாக போகும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காட்டுக்கொல்லை பகுதியைச் சேர்ந்த சேகர் (42), கோவிந்தராஜ் (36), பல்லக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (58) ஆகிய 3 பேரும் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த டிரைவர் பிரேம்குமார் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் சின்னப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 3 பேரை இன்று கைது செய்தனர்.