தஞ்சையில் பிறந்து 3 நாட்களேயான குழந்தை சாவு: உறவினர்கள் சாலை மறியல்

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று நாளான ஆண் குழந்தை இறந்ததால்உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கோனூரைச் சேர்ந்தவர் கார்த்திக் (33). இவரது மனைவி சீதாதேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. மூன்றாவது முறையாக கர்ப்பமான சீதாதேவிக்கு கடந்த 11ஆம் தேதி இரவு வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டு, தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 12 ஆம் தேதி அதிகாலை, சீதாதேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இருப்பினும், குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதாக கூறி, வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று நாட்களாக குழந்தையை பெற்றோருக்கு காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் குழந்தை இறப்பு தொடர்பாக கேட்டனர். ஆனால் மருத்துவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மேற்கு காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தையின் தலையில் ரத்தம் உறைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிறந்த குழந்தைக்கு தலையில் எவ்வாறு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் குழந்தையை கீழே போட்டு இருந்தால் தான் காயம் ஏற்பட்டதா என தெரியவில்லை. இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story