நீலகிரியில் 3 நாள்கள் ஜமாநந்தி
கோப்பு படம்
தமிழகத்தில் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் கணக்குகளை ஆய்வு செய்யவும் ஆண்டுதோறும் ஜூன் மாதம் ஜமாபந்தி முகாம் நடத்தப்படுகிறது. இதில் பட்டா மாற்றம் உள்பட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.
இதன்படி நீலகிரி மாவட்டத்தில் பசலி 1433-க்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகிற 19-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் நடைபெறவுள்ளது.
குந்தா தாலுகாவில் 19, 20-ம் ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை தாங்குகிறார். பந்தலூர் தாலுகாவில் 19, 20-ம் தேதிகளில் நடைபெறும் முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்குகிறார். குன்னூர் தாலுகாவில் 19, 20, 21-ம் ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமுக்கு,
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரனும், ஊட்டி தாலுகாவில் 19, 20-ம் ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாமுக்கு ஊட்டி ஆர்.டி.ஒ., மகராஜும், கோத்தகிரி தாலுகாவுக்கு ஆர்.டி.ஓ., சதீஷும், கூடலூர் தாலுகாவுக்கு ஆர்.டி.ஓ., செந்தில்குமாரும் தலைமை தாங்குகின்றனர்.
எனவே பொதுமக்கள் மேற்கண்ட 3 நாட்களில் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று தங்கள் கோரிக்கைகளை வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் அளிக்கலாம் என்று வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர்.