செவ்வாய்பேட்டையில் மயங்கி கிடந்த 3 முதியவர்கள் சாவு

செவ்வாய்பேட்டையில் மயங்கி கிடந்த 3 முதியவர்கள் சாவு

கோப்பு படம் 

செவ்வாய்பேட்டையில் மயங்கி கிடந்த 3 முதியவர்கள் இறந்தனர்.

சேலம் செவ்வாய்பேட்டையில் வெவ்வேறு சம்பவத்தில் மயங்கி கிடந்த 3 முதியவர்கள் இறந்தனர். அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை சங்கீத் தியேட்டர் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 70 வயது முதியவர் ஒருவர் விழுந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். ஆனால் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை. இதேபோல், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் ரெயில்வே கூட்ஷெட் பகுதியில் மேம்பாலத்தின் திட்டில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. மேலும், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் ஜெயமுருகன் மளிகை கடை எதிரில் 75 வயது முதியவர் திடீரென மயக்கம் அடைந்து கிடந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். அவரது பெயர், முகவரி ஏதும் தெரியவில்லை. இந்த 3 சம்பவங்கள் தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story