3 தரைப்பாலங்கள் உடைந்தன; போக்குவரத்து துண்டிப்பு
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள், மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள். நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதியில் பெய்த கனமழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக மாறியது.
இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்து மக்களின் இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்பி வருகிறது. இந்த நிலையில் மழை வெள்ளத்தில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு அருள்நகர், ஜெகதீஷ் நகர், 8-வது வார்டில் உள்ள காமாட்சி நகர் ஆகிய 3 இடங்களில் உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டன.
அப்பகுதிகளில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு உள்ளன. ஆதனூர், மாடம்பாக்கம், படப்பை, சோமங்கலம் செல்வதற்கான இந்த தரைப்பாலங்கள் உடைந்ததால் அந்தப் பகுதியில் இருந்து கூடுவாஞ்சேரி வருவதற்கும் அதே போல் கூடுவாஞ்சேரியில் இருந்து செல்லும் வாகனங்களும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.