3 புதிய குற்றவியல் சட்டங்கள் - மறுபரிசீலனை செய்ய காேரும் வழக்கறிஞர்கள்
இந்தியாவில் கடந்த 1860 தொடங்கி நேற்று வரை இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.,) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.,) இந்திய சாட்சியங்கள் சட்டம் என 3 சட்டங்கள் அமலில் இருந்து வந்தன. இப்படி இருக்கையில், இச்சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.,) பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.,) பாரதிய சாட்சிய அதினியம் என 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.
இச்சட்டங்கள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த புதிய குற்றவியல் சட்டங்களில் சில மோசமான திருத்தங்கள் இருப்பதாகவும் இதனால் நாட்டில் அமைதியின்மை நிலவ வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் பல்வேறு மாநில பார் கவுன்சில்கள் உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்து பேராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புதிய சட்டங்களில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருக்கிறது. எனவே, இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதே போல நீலகிரி மாவட்டம் கூடலூர், குன்னூர் உள்ளிட்ட இடங்களிலும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.