கஞ்சா வழக்கில் 3பேர் கைது - 3 செல்போன்கள், கத்தி பறிமுதல்
கைது
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திராமேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி, சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் சுடுகாடு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் யாசர் அராபத் (25), லூர்தம்மாள்புரம் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த ரஹிம் மகன் சலிம் சாதிக் (24) மற்றும் லூர்தம்மாள்புரம் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தியாகு மகன் அர்னால்டு (23) ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 250 கிராம் கஞ்சா, ஒரு கத்தி,3 செல்போன்கள், 25 ப்ளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட யாசர் அராபத் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் உட்பட 10 வழக்குகளும், மதுரை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என 18 வழக்குகளும், அர்னால்டு மீது வடபாகம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது."