மது குடிக்க பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது
பணம் கேட்டு மிரட்டல்
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகரை அடுத்த நெய்யூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் ராஜகுமார் (48). இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் ராஜகுமார் இரணியல் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு மது வாங்க சென்றுள்ளார். அப்போது டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்த பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நெய்யூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சுபின் (35), அதே பகுதியை சேர்ந்த தர்மர் மகன் மகேஷ், கானாங்குளம் பகுதி சேர்ந்த தங்கையின் மகன் ராஜ்குமார் ஆகியோர் எலக்ட்ரிஷியன் ராஜ்குமாரை தடுத்து நிறுத்தி குடிக்க 100 ரூபாய் பணம் கேட்டுள்ளனர்.
பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து இரணியல் - நாகர்கோவில் செல்லும் சாலையில் வைத்து சரமரியாக தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் எஸ்ஐ முத்துகிருஷ்ணன் ஆகியோர் தப்பி ஓடிய மூவர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த மூவரையும் கைது செய்து குடித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அவர்களை நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.