திட்டச்சேரி அருகே சாராயம் கடத்திய 3 பேர் கைது
கைது
நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த வாழ்மங்கலம் சோதனை சாவடியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த .வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் கடம்பரவாழ்க்கை நடுத்தெருவை சேர்ந்த விஷ்வநாதன் மகன் கண்ணன் (வயது 30), கோகூர் தீத்தாம்பேட்டை பகுதியை சேர்ந்த ரெங்கசாமி மகன் முருகானந்தம் (வயது 38) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மானாம்பேட்டை சோதனை சாவடியில் திட்டச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மரித்து சோதனை நடத்தியதில் மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அருள்மொழித்தேவன் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் கிருஷ்ணன் (வயது 19) என்பதும் இவர் காரைக்கால் பகுதியில் இருந்து கீழ்வேளூர் பகுதிக்கு சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் கிருஷ்ணனை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.