தேர்தல் பணிக்கு 3 ஆயிரம் போலீசார் தயார்
சிவகங்கை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள 3 ஆயிரம் போலீசார் தயாா் நிலையில் உள்ளனா்.
சிவகங்கை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள 3 ஆயிரம் போலீசார் தயாா் நிலையில் உள்ளனா்.
தமிழகம் முழுவதும் வருகிற 19 -ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் நடக்க உள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை(தனி), திருப்பத்தூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 1, 873 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பதற்றமான 162 வாக்குச்சாவடிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளன.
மக்களவைத் தோ்தலையொட்டி, சிவகங்கையில் 3, மானாமதுரை 2, காரைக்குடி 3, தேவகோட்டை 2, திருப்பத்தூரில் 3 என மொத்தம் 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூடுதல் பாதுகாப்பு பணிக்கு நாகாலாந்து ஆயுதப்படை போலீஸ், திருச்சி பட்டாலியன் போலீஸ், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் என மொத்தம் 357 போலீஸாா் வரவழைக்கப்பட்டனா். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள், பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்களுடன் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா் உள்பட மாவட்டம் முழுதும் உள்ள 1,920 போ் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் ஊா்க்காவல் படை, தீயணைப்புத் துறை, முன்னாள் படை வீரா்கள், தேசிய தொண்டா் படை உள்ளிட்ட 930 பேரும் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தோ்தல் நாளன்று மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட தயாா்நிலையில் உள்ளனா்.