30 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன மகன் வீடு திரும்பிய மகிழ்ச்சியில் பெற்றோர்கள்.பெற்றோரின் வீட்டை 30 வருடங்களுக்குப் பிறகு தேடி கண்டுபிடித்த மகன்.

X
அரியலூர், ஜூன்.21- அரியலூர் மாவட்டம் செட்டித்திருக்கோணம் காங்கேயம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செங்கான் (எ) கண்ணையன் - ருக்குமணி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு பின் இரண்டாவதாக பிறந்த மகன் கோவிந்தராஜ். இவருக்கு 12 வயது ஆகும் பொழுது ஏழாவது படிக்கும் பொழுது தந்தை திட்டிய காரணத்தினால் கோபித்துக் கொண்டு கோவிந்தராஜ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தனது மகன் கோவிந்தராஜை தேடி பல இடங்களிலும் அலைந்த கண்ணையன், சில நேரங்களில் சென்னைக்கும் சென்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலும் தனது மகனை தேடி உள்ளார். பல வருடங்கள் தொடர் தேடுதலுக்குப் பிறகும் மகன் கிடைக்கவில்லை என்பதால் கடந்த சில வருடங்களாக தேடுதலை கைவிட்டு உள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் தங்களது கிராமத்தில் ஒரு சிலர் தன்னை விசாரிப்பதாக கிராம மக்கள் கூறியதன் அடிப்படையில் பார்த்தபோது தனது மகன் வளர்ந்து பெரியவனாகி 30 வருடங்களுக்குப் பிறகு தன்னை தேடி வந்தது கண்டு கண்ணையனும் அவரது மனைவி ருக்குமணியும் திகைத்துப் போய் உள்ளனர். இதே நிலையில் தான் கோவிந்தராஜும் இருந்துள்ளார். 12 வயதில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் முதலில் டீக்கடையில் வேலை பார்த்து பின்னர் தான் வேலை பார்த்த டீக்கடையில் உரிமையாளர் மூலமாகவே வளர்ந்து பெரியாளாகி அவர் மூலமாகவே திருமணம் முடித்து தற்பொழுது சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்பமாக வசித்து வருகிறார் கோவிந்தராஜ். தற்பொழுது 42 வயதாகும்கோவிந்தராஜ்க்கு இரண்டு மகன்கள் உள்ளார்.பெற்றோரும் மகனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட பொழுது தனது மகன் கையில் உள்ள தழும்பை வைத்து தற்பொழுது தனது மகனை கண்டுபிடித்த கண்ணையன் ருக்மணி ஆகியோர் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்தோஷத்தில் திளைத்துள்ளனர். பின்னர் மாலையில் தனது பெற்றோரை கையோடு கோவிந்தராஜ் அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் தன்னுடன் பெற்றோரை வைத்துக்கொண்டு பின்னர் புதன்கிழமை மீண்டும் அவர்களின் கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் கோவிந்தராஜ். 30 வருடங்களுக்குப் பிறகு கண்ணையன் ருக்குமணி தம்பதியினர் மகன் கிடைத்த சந்தோஷத்தில் நிம்மதி அடைந்துள்ளனர்.
Next Story

