கோடை விழாவுக்காக ஏற்காட்டில் தயாராகும் 30 ஆயிரம் மலர் செடிகள்

கோடை விழாவுக்காக ஏற்காட்டில் தயாராகும் 30 ஆயிரம் மலர் செடிகள்

மலர் செடிகள்

ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி 30 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தயாராகி வருகிறது.

‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசி வருகிறது. அதேநேரத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் குளுகுளு பிரதேசங்களை நோக்கியும், சுற்றுலா தலங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்காட்டில் கோடை விழா நெருங்குவதால் 2 மாதத்திற்கு முன்பே 30 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இதில் பூக்கள் பூத்து கோடை விழாவிற்கு ஆயத்த நிலையில் உள்ளன. அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன் ஆகிய இடங்களில் ஜீனியா, சால்வியா, மேரிகோல்டு சூரியகாந்தி, ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா பூ வகைகள் மலர தொடங்கி உள்ளன. இந்த செடிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது இதனிடையே கோடை விடுமுறையையொட்டி விடுமுறை நாட்களில் அதிக அளவில் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

தற்போது கோடை வெயில் தாக்கத்தால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளது.ஆனால் கடந்த 2, 3 நாட்களாக ஏற்காட்டில் வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளது. குறிப்பாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், மாலையில் குளுகுளு சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மாலை வேளையில் குளுகுளு சூழலை ரசித்து செல்கின்றனர். இதனிடையே நேற்று தொழிலாளர் தின விடுமுறையையொட்டி ஏற்காட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அண்ணா பூங்கா மற்றும் ரோஸ் கார்டனில் உள்ள மலர்களை கண்டு ரசித்தனர். சிறுவர்கள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். சிலர் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story