300 மனுக்களுக்கு உடனடி தீர்வு காண ஆட்சியர் உத்தரவு

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (06.01.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 300 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார். தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காலநிலை மாற்ற இயக்கம் சார்பில், அனைத்து அரசு தொடக்க /நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் யாவரும் கேளிர் ஹவுஸ் சிஸ்டம் மூலமாக, உலக ஆற்றல் தினத்தை முன்னிட்டு கடந்த 06.12.2024 அன்று பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசு, ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், கல்லல் மற்றும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வந்த 02 சத்துணவு ஊழியர்கள் பணியிடை மரணம் காரணமாக, மேற்கண்ட 02 சத்துணவு ஊழியரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமண ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

