குமரி அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மறுகாலில் திறப்பு
கனமழை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இன்றும் காலை முதல் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தன. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 52.4 மி.மீ மழை பெய்திருந்தது. கோதையாறு, குற்றியாறு, மைலாறு, மோதிரமலை, கிளவியாறு என முக்கியமான மலை பகுதிகள் வழியாக பாயும் அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மழை காரணமாக மலைப்பகுதிகளில் திரும்பிய பக்கம் எல்லாம் வெள்ளம் பாய்ந்து செல்கிறது. காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.7 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3511 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 636 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மேலும் அணையில் இருந்து 3008 கன அடி தண்ணீர் உபரியாக மறுகாலில் திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.27 அடியாகும். அணைக்கு 2133 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.