வெள்ள அபாயம் எதிர்கொள்ள 3,000 மணல் மூட்டைகள் தயார்
தயார் நிலையில் மூட்டைகள்
உத்திரமேரூர் ஒன்றியத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 92 ஏரிகள் உள்ளன. மழை பாதிப்பு அதிகம் உள்ள ஏரிகள் குறித்து நீர்வளத் துறை சார்பில் கண்காணிக்கப்படுகிறது. கரை மற்றும் கலங்கல் பகுதிகள் பலவீனமான ஏரிகள், மதகு சேதமான ஏரிகள் குறித்தும் கணக்கெடுத்துள்ளனர்.
வட கிழக்கு பருவ மழையின் போது, ஏரிக்கரையில் ஏற்படும் மண் அரிப்பு, கரை உடைப்பு போன்றவற்றை சமாளிக்க மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில், நீர்வளத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து, உத்திரமேரூர் ஒன்றிய நீர்வளத் துறை இளநிலை பொறியாளர் மார்க்கண்டன் கூறியதாவது: பருவ மழையின் போது, உத்திரமேரூர் ஒன்றிய ஏரிகளில் ஏற்படும் வெள்ள அபாயத்தை தவிர்க்க, 3,000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. இவை போக, 5,000 சாக்கு பைகள் கையிருப்பு வைத்துள்ளோம். தேவையான சவுக்கு மரக்கொம்புகள் உள்ளிட்டவை முன் எச்சரிக்கையாக இருப்பில் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.