ரூ.3.07 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடனுதவிக்கான ஆணைகள் - அமைச்சர் வழங்கினார்

ரூ.3.07 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடனுதவிக்கான ஆணைகள் - அமைச்சர் வழங்கினார்
X
சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில், 81 மாணாக்கர்களுக்கு ரூ.3.07 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடனுதவிக்கான ஆணைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற மாபெரும் சிறப்பு கல்வி கடன் முகாமில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி (மானாமதுரை), மாங்குடி அவர்கள் (காரைக்குடி) ஆகியோர் முன்னிலையில், மாணாக்கர்களுக்கு கல்வி கடனுதவிக்கான ஆணைகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார். பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும்போது தமிழ்நாடு முதலமைச்சர் அழியா செல்வமான கல்வியை மாணவர்கள் நிரம்பபெற்றிடும் வகையில், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி, கல்வி வளர்ச்சி நிறைந்த மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. அந்த வகையில், பள்ளிக் கல்வித்துறைக்கு 40 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலும், உயர்கல்வித்துறைக்கு 07 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 47 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோரின் நிலையிலிருந்து, மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்தையும் செய்து வருகிறார்கள். குறிப்பாக, அரசு பள்ளியில் பயின்று பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு பயில்கின்ற மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/-ஊக்கத்தொகையாக வழங்கிடும் பொருட்டு, புதுமைப்பெண் திட்டமும், தமிழ்ப் புதல்வன் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, மாணாக்கர்களிடையே உயர்கல்வி கற்பதற்கான ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயர்கல்வி கற்பதற்கு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக, சிறப்பு கல்விக்கடன் முகாம்களும் நடத்தி அதன் வாயிலாக மாணவர்கள் பயன்பெறுகின்ற வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் மாபெரும் சிறப்பு கல்விக்கடன் முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், மாவட்ட அளவில் சிறப்பு கல்வி கடன் முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, இன்றைய தினம் சிவகங்கையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில், சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமினை முன்னிட்டு நாளாது தேதி வரை விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு, அந்தந்த வங்கிகளினால் அனுமதிக்கப்பட்டு, அதன்படி இன்றைய தினம் மொத்தம் 81 மாணாக்கர்களுக்கு ரூ.3.07 கோடி மதிப்பீட்டிலான கல்வி கடன் ஆணைகள் வழங்கப்படுகிறது. இம்முகாமில் கலந்து கொண்ட மாணாக்கர்கள் புதிய கல்வி கடனுதவிகள் பெறுவதற்கும், விண்ணப்பங்களை வங்கி அலுவலர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். தகுதியான மாணாக்கர்களுக்கு கடன் அனுமதி உத்தரவுகளை விரைவில் கிடைக்கப்பெற செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் 932 மாணாக்கர்களுக்கு ரூ.22.3 கோடி மதிப்பீட்டிலும், 2022-23 ஆம் நிதியாண்டில் 1,140 மாணாக்கர்களுக்கு ரூ.22.83 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 ஆம் நிதியாண்டில் 1,715 மாணாக்கர்களுக்கு ரூ.33.81 கோடி மதிப்பீட்டிலும் கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் 3,000 மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் உதவிகள் வழங்கிட தமிழக அரசால் ரூ.42 கோடி மதிப்பீட்டில் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்டத்தின் வட்ட அளவிலான 09 முகாம்களும், மாவட்ட அளிவலான 03 முகாம்களும் நடத்தப்பட்டு, டிசம்பர் 2024 வரை 1,766 மாணாக்கர்களுக்கு ரூ.28.24 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமினைப் போன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் முகாம்கள் நடத்தி, கல்விக்கடனுதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி கடன் பெற்றுள்ள மாணாக்கர்கள், இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு, வங்கிக்கடன்களை சரிவர செலுத்தி, சிறப்பாக பயின்று, தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
Next Story