ஜல்லிக்கட்டு போட்டியில் 32 பேர் காயம்!
மஹா சிவராத்திரி விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில் போட்டியில் 32 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள இடையாத்தூரில் பொன் மாசிலிங்க அய்யனார் கோயில் மஹா சிவராத்திரி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தொடங்கிவைத்தார். பொன்னமராவதி வட்டாட்சியர் எம். சாந்தா முன்னிலை வகித்தார். தொடக்கமாக கோயில் காளைகளும், பின்னர் பல்வேறு மாவட்டங்களிருந்து கொண்டு வரப்பட்ட 928 காளைகளும் அவிழ்க்கப்பட்டன. 271 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கமும், பல்வேறு பொருள்களும் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 11 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 13 பேர், பார்வையாளர்கள் 8 பேர் என 32 பேர் காயமடைந்தனர். இவர்களில் 2 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 3 பேர் பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். மற்றவர்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Next Story