33 நாட்களுக்குப் பிறகு தலை சிதைந்த நிலையில் எலும்பு கூடாக மீட்பு

33 நாட்களுக்குப் பிறகு தலை சிதைந்த நிலையில் எலும்பு கூடாக மீட்பு
X
செம்பட்டி அருகே காணாமல் போன கூலித்தொழிலாளி, 33 நாட்களுக்குப் பிறகு தலை சிதைந்த நிலையில் எலும்பு கூடாக மீட்பு. காவல்துறையினர் தீவிர விசாரணை
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த, ஆத்தூர் அருகே அக்கரைப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காமாட்சி (50) விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், தென்னை தோப்புகளில் தேங்காய் வெட்டும் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு காளியம்மாள் (45) என்ற மனைவியும், பிரியா (25) விக்னேஸ்வரன் (23) வீரம்மாள் (9) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6.7.2025 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரை தேடி கண்டுபிடிக்க முடியாத நிலையில்,கடந்த 14.7.2025 அன்று அவரது மனைவி காளியம்மாள் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்நிலையில், தலை சிதைந்த நிலையில் எலும்பு கூடாக அக்கரைப்பட்டி குடகனாறு கரையோரம் 33 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி காவல்துறையினர், கூலிதொழிலாளி காமாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செம்பட்டி அருகே காணாமல் போன கூலித்தொழிலாளியின் உடல் 33 நாட்களுக்கு பிறகு தலை சிதைந்த நிலையில் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story