சேலம் மாவட்டத்தில் 33 பறக்கும் படைகள் அமைப்பு

செல்ஃபி பாயிண்ட்
நாடாளுமன்ற தேர்தலைமுன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடவுள்ள பல்வேறு குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி,
அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட உள்ளது. பறக்கும் படைகள் அதேபோல் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் செயல்படவுள்ளது. 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்கும் வாகன சோதனைகளில் ஈடுபடுவதற்கும் முதற்கட்டமாக 33 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 33 நிலை கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
அதேபோன்று, 11 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும், 11 வீடியோ பார்வையிடும் குழுக்களும், உதவி கணக்குக் குழுக்களும், ஊடக மையத்திற்கு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு தேர்தல் தொடர்பாக கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் நாள்தோறும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி மேற்கொள்ளவும், தொடர்புடைய படிவங்களில் அறிக்கைகளை அனுப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
