4 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டம்

அமைதி கூட்ட பேச்சு வார்த்தையில் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வாழக்கரை ஊராட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 அம்ச கோரிக்கை வலியுறுத்தி, நடக்கவிருந்த சாலை மறியல் போராட்டத்திற்கு, அமைதி கூட்ட பேச்சுவார்த்தை திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் கிரிஜாதேவி தலைமையில் நேற்று நடைபெற்றது. வாழக்கரை ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் முறைகேடு குறித்து குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பணியில் உள்ள ஊராட்சி செயலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். வாழக்கரை ஊராட்சியில் ஓஹெச்டி ஆப்ரேட்டராக பணிபுரிந்து வரும் கண்ணன் என்பவருக்கு வழங்கப்படாமல் இருக்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளையும், 15 நாட்களுக்குள் நிறைவேற்றி தருவது எனவும், அது தொடர்பான  நடவடிக்கைகள் விரைந்து  எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது. கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் டி.செல்வம், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ஜி.சங்கர், கிளைச் செயலாளர் டி.சந்திரகாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story