4 மாத கர்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்படாமல் கல்லீரலில் இருந்த கட்டி அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

X
தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நான்கு மாத கர்ப்பிணிக்கு, கருச்சிதைவு ஏற்படாமல், கல்லீரலில் இருந்த கட்டியை அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த செளந்தரி (26), இவருடைய கணவர் கார்த்திக். பட்டதாரியான செளந்தரி, நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது, அவருக்கு கல்லீரலில் கட்டி இருப்பது தெரியவந்தது. அதனை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இருப்பினும், நான்கு மாத கருவுடன் செளந்தரி இருப்பதால், அறுவை சிகிச்சை செய்வது மிகவும் சிக்கலான, சவாலான ஒன்றாக இருந்தது. ஆனால், மருத்துவக்கல்லுாரி முதல்வர் மருத்துவர் பாலாஜிநாதன் உத்தரவின்பேரில், அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் அரவிந்தன், மயக்கவியல் மருத்துவர் சாந்தி பால்ராஜ், மகப்பேறு மருத்துவர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், செளந்தரிக்கு நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் உதவியுடன் கல்லீரலில் இருந்த கட்டியை முழுமையாக அகற்றினர். இது குறித்து மருத்துவக்கல்லுாரி முதல்வர் முதல்வர் பாலாஜிநாதன் கூறியதாவது: கர்ப்பிணி பெண்ணுக்கு கல்லீரலில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் போதோ அல்லது அதன் பிறகோ கருச்சிதைவு ஏற்படும் அபாயமும், சில நேரம் தாயின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை இருந்தது. இருப்பினும் செளந்தரிக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அறுவை சிசிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். தற்போது தாயும், கருவில் உள்ள சிசுவும் ஆரோக்கியமாக உள்ளனர்" இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ஆறுமுகம், மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

