4 பேர் மண்எண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

X
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியில் சேர்ந்தவர் ஆண்டி (வயது 54) இவரது மனைவி வெள்ளையம்மாள், ஆண்டியின் தங்கை சடையம்மாள், ஆண்டியின் மகள் குப்புத்தாய் ஆகியோர் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 5 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கான பட்டா அவர்களிடம் உள்ள நிலையில் அதை வேறு சிலர் சேர்ந்து ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இடத்திற்குள் விடவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வருகை தந்த ஆண்டி, மனைவி வெள்ளையம்மாள், தங்கை சடையம்மாள், மகள் குப்புத்தாய் என நான்கு பேரும் தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீ குளித்து தற்கொலை செய்ய முயன்றனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதை தொடந்து தீக்குளிக்க முயன்றவர்களின் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பதற்கு போலீஸார் ஏற்பாடு செய்தனர். பின்னர் விசாரணைக்காக 4 பேரையும் திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

