4-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் கம்பர் தெருவை சேர்ந்தவர் சபரீஸ்வரன். இவர் நாகை மாவட்டம் பாப்பாக்கோவிலில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில், பிசியோதெரபி 4-ம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த, அவர் வழக்கம் போல நேற்று கல்லூரி முடிந்து மாலை விடுதிக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், திடீரென 4 -வது மாடிக்கு சென்ற சபரிஸ்வரன், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவர் சபரிஸ்வரனை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சபரிஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். பின்னர்,- சபரிஸ்வனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். சபரிஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததை தொடர்ந்து, சக மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி முன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல்துறை சார்பாக தனியார் கல்லூரி முன்பு விடிய விடிய ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கல்லூரி நிர்வாகம் உரிய முறையில் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறி சபரிஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று காலை கல்லூரி முன் திரண்டனர். அவர்களை கல்லூரிக்குள் செல்ல விடாமல் கல்லூரிக்கு செல்லும் சாலை முகப்பிலயே பேரிகார்டரை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினா். இதனால் மாணவர்களும்,. உறவினர்களும் பேரிகார்டடை தள்ளி விட்டு உள்ளே போக முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மாணவர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும், மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மாணவன் இறப்பிற்கு நீதி கேட்டும் கோஷங்களை எழுப்பினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால், நாகை- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பக்கப்பட்டது. போராட்டத்தில், ஈடுபட்டுள்ள உறவினர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்புடன், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திர மூர்த்தி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். அப்போது கல்லூரி நிர்வாகமும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையோடு தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story





