4 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம்: காப்பகத்தில் 20 பேர் இடமாற்றம்

4 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம்:  காப்பகத்தில் 20 பேர் இடமாற்றம்

திருச்சியில் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 4 சிறுவர்கள் தப்பி ஓட்டம் ஓடிய சம்பவத்தில், அங்கிருந்த 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

திருச்சி குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 4 சிறுவர்கள் தப்பி ஓட்டம் ஓடிய சம்பவத்தில், அங்கிருந்த 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி சத்திரம் பகுதியில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உரிமம் பெற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தை திருமணங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர் சிறுமிகள், பல்வேறு காரணங்களால் வீடுகளில் இருந்து வெளியேறி காவல் துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு காப்பக வார்டனின் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டு 16 வயதுள்ள ஒடிசா மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தப்பி ஓடினா்.

இது குறித்து காப்பகத்தின் பொறுப்பாளர் ராஜேஷ், கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 சிறுவர்களையும் தேடி வருகின்றனர். ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்த துப்பு கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அந்தக் காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து விளக்கம் கேட்டார். பின்னர் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டார்.

அதன்படி குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர். மறு உத்தரவு வரும் வரை அந்த சிறுவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story