குட்கா கடத்திய 4 பேர் கைது
குட்கா கடத்திய 4 பேரை கைது செய்த காவல்துறையினர் 100 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து வத்திராயிருப்பு போலீசார் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வத்திராயிருப்பு - மகாராஜபுரம் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே வந்த ஆட்டோ மற்றும் பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதில் இருந்த 85.5 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய பயணிகள் ஆட்டோ, பைக் மற்றும் ரூ.ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலில் ஈடுபட்ட வேலூர் மாவட்டம் ஓசூரை சேர்ந்த சுப்பிரமணி(51), சுப்புலாபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன்(25), கூமாபட்டியைச் சேர்ந்த திலீபன்ராஜா(36) ஆகிய 3 பேரை கைது செய்த, வத்திராயிருப்பு போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முகமது அஸ்லம்(25) என்பவர் பைக்கில் கடத்தி வந்த 15.650 கிலோ குட்கா மற்றும் ரூ.4,500 பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். முகமது அஸ்லமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.