மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
மக்களவைத் தேர்தல்-2024 34- விருதுநகர் மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைந்துள்ள 1,689 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு 19.04.2019 அன்று முடிவுற்று, வாக்குப்பதிவு அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் விருதுநகர்-அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்புகளுடன், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது:- நடைபெற்ற மக்களவைத் தேர்தல்-2024 34.விருதுநகர் பாராளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 1,689 வாக்குச்சாவடி மையங்களிலிருந்து வாக்குப்பதிவுடன் கூடிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு வரப்பட்டு, விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணிக்கை மையங்களில், விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுபார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா தலைமையில் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 545 பணியாளர்களுடன் 4 அடுக்குப் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இதற்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை சிசிடிவி உடன் இணைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டி வாயிலாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் 24 மணிநேரமும் கண்காணித்து கொள்ளலாம். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க உயர் நிலையான அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.