டூவீலரை பறித்துச் சென்ற காவலர் உட்பட 4 பேர் கைது

மது வாங்கச் சென்ற நபரை இடைமறித்து, டூவீலரை பறித்துச் சென்ற காவலர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள, என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி வயது 47. இவர் நேற்று முன்தினம், தளவாய் பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடையில் மது வாங்கிக் கொண்டு, தனது டூவீலரில் ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டார். அப்போது, அங்கு வந்த நான்கு வாலிபர்கள் குப்புசாமியிடம், உங்கள் மீது சந்தேகம் உள்ளது, டூவீலர் லைசன்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் ஆகியவற்றை காட்டுமாறு கூறியுள்ளனர். குப்புசாமி தன்னிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து நான்கு பேரும் சேர்ந்து, குப்புசாமி டூ வீலரை பறித்துக் கொண்டு, காவல் நிலையத்துக்கு வருமாறு கூறிவிட்டு டூவீலரை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். இது குறித்து குப்புசாமி வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், டூவீலரை பறித்துச் சென்றது யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டபோது, கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள சின்ன குளத்து பாளையம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சுதாகர், ஜெகதீஷ், முருகன், சக்திவேல் என்பது தெரிய வந்தது.

இதனால் நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த டூவீலரையும் பறிமுதல் செய்தனர். இதில் பிடிபட்ட சக்திவேல், கோவையில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காவலர் ஒருவரே வாகனத்தை பறித்துச் சென்ற விவகாரம், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story