காரைக்குடியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்கள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பழனிச்சாமி வீதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 36). இவர் எம்.எம்.தெருவில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் முகமது ரபீக்கின் செல்போனை பறித்து சென்றனர்.
முகமது ரபீக் கொடுத்த புகாரில் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதேபோல், காரைக்குடியில் கட்டிட வேலை செய்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனு (வயது 19) வியாழக்கிழமை சந்தை அருகே நடந்து செல்போனில் பேசியபடி சென்ற போது இரண்டு பைக்கில் வந்த 4 பேர் மனுவின் செல்போனை பறித்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து மனு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு இருசக்கர வாகனத்தின் பதிவுஎண் காரைக்குடி பகுதியில் ஊர்க்காவல் படையில் பணிபுரியும் பாலமுருகன் என்பவரது இருசக்கர வாகனம் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து பாலமுருகனை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பாலமுருகனின் நண்பர்களான திருவாடானை சேர்ந்த பால்ராஜ், காரைக்குடியைச் சேர்ந்த சரவணன்,
அப்துல் மாலிக் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நான்கு செல்போன் மற்றும் சென்னையில் திருடப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் மற்றொரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.