தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல் - 40 நாள் ஆண் குழந்தை மரணம்

தாய் பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 40 நாள் ஆண் குழந்தை மரணம்
சேலம் அம்மாபேட்டை வித்யாநகரை சேர்ந்தவர் சக்திவேல் (36), ஏடிஎம் மெசினில் பணம் நிரப்பும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரீத்தி (32). இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் இரட்டைக்குழந்தை (ஒரு ஆண்,ஒரு பெண்) பிறந்துள்ளது. இரு குழந்தைகளையும் பெற்றோர் கவனமுடன் கவனித்து வந்துள்ளனர்.
இன்று அதிகாலையில் ஆண் குழந்தை அழுதவுடன், அக்குழந்தைக்கு பிரீத்தி தாய்ப்பால் கொடுத்துள்ளார். பின்னர், தொட்டிலில் குழந்தையை போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் எழுந்து, குழந்தையை எடுத்து பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் மூக்கின் வழியே பால் வடிந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளது.
உடனே குழந்தையை எடுத்துக் கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், பால் குடித்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார், சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இரட்டை குழந்தையாக பிறக்கும் போதே ஆண் குழந்தையின் மூக்கு துவாரம் மேல் நோக்கி நீண்டு இருந்துள்ளது. அது வளர வளர சரியாகிவிடும் எனத்தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது பால் குடித்த போது மூச்சுதிணறல் ஏற்பட்டு அக்குழந்தை இறந்திருப்பது குடும்பத்தாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
