400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு
பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி வைத்து வாழ்த்தினார் ************************* பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (04.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ,ஆ.ப, அவர்கள் தலைமையில் ஜே,கே.மஹாலிலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 150 கர்ப்பிணி பெண்களுக்கு குன்னம் எம்.எஸ்.டி திருமண மண்டபத்தில் நடத்தி வைத்து வாழ்த்தினார். இந்நிகழ்வில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண் நேரு அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய நான்கு வட்டங்களிலும் தலா 100 பயனாளிகள் வீதம் 400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில், பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமடைய, சமுதாயத்தில் பெண்கள் சுய மரியாதையுடன் வாழ, யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற என பெண்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தி எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் காலையில் பசியோடு சென்று கல்வி கற்க முடியாது என்பதை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார்கள். இத்திட்டத்தை சிறப்பை உணர்ந்து, லண்டன் மாகாணத்தில் காலை உணவு திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நம்மை ஆட்சி செய்த இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகரில் தற்போது நம் தமிழ்நாட்டைப் பார்த்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த திட்டங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தி வந்த காலம் மாறி தற்போது பல்வேறு உலக நாடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது என்பது மிகவும் பெருமைக்குரிய செய்தியாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிர் மாதந்தோறும் தங்களுடைய குடும்ப செலவிற்கு தங்களுடைய கணவரையும், தங்களுடைய பெற்றோரையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். இதனை அறிவித்த போது இதற்கு உதவித்தொகை என்று நான் பெயர் வைக்கவில்லை மாறாக உரிமைத் தொகை என்றே பெயர் வைத்துள்ளேன் என கூறினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள இந்தத் திட்டத்தினை பார்த்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்களுக்கும் முன்னோடி திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளது. அதேபோல 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் புதுமைப்பெண் திட்டத்தினையம் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்தத் திட்டம் அறிவிப்பதற்கு முன்பாக தமிழகத்தில் 50 சதவீத பெண்கள் மட்டுமே உயர் கல்வி பயின்று வந்தனர். இந்தத் திட்டம் அறிவித்ததற்கு பின்பு தமிழகத்தில் 85% மேற்பட்ட பெண்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். பெண்களுடைய வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தக்கூடிய இது போன்ற பல்வேறு திட்டங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் செயல்படுபத்தப்படுகின்றது. பெண்களுக்கு அண்ணனாக, அப்பாவாக, உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார்கள். கர்ப்பிணி தாய்மார்கள் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, தங்களது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து, சிறந்த கல்வியினை வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, 30 நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தூய்மைப் பணியாளர்களுக்கான நல வாரிய அட்டைகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கினார்கள். தொடர்ந்து, குன்னம் எம்.எஸ்.டி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் வழங்கி, கர்ப்பிணி பெண்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்த அறுசுவை உணவினை கர்ப்பிணி பெண்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்கள். இந்நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் திருமதி அம்பிகா ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் இரா.ஜெயஸ்ரீ, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் .ராஜ்குமார் துரைசாமி குழந்தை வளர்ச்சித்திட்ட வட்டார அலுவலர் மு.செ.அருணா (வேப்பந்தட்டை) பிரேமா (பெரம்பலூர்) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story







