டிஎன்பிஎஸ்சி குரூப் 4 - நாமக்கல்லில் 41,278 பேர் தேர்வு எழுதினர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தனி உதவியாளர், கிளார, தனி செயலாளர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், ஆய்வக உதவியாளர் உட்பட 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 பணிக்காக, நாமக்கல் தாலுகாவில் அமைக்கப்பட்டுள்ள 39 தேர்வு மையங்களில் 2,073 தேர்வர்களும், மோகனூர் தாலுகாவில் 8 தேர்வு மையங்களில் 2,229 தேர்வர்களும், சேந்தமங்கலம் தாலுகாவில் 17 தேர்வு மையங்களில் 4,562 தேர்வர்களும், ராசிபுரம் தாலுகாவில் 44 தேர்வு மையங்களில் 13,355 தேர்வர்களும், பரமத்தி வேலூர் தாலுகாவில் 21 தேர்வு மையங்களில் 5,872 தேர்வர்களும், திருச்செங்கோடு தாலுகாவில் 35 தேர்வு மையங்களில் 10,405 தேர்வர்களும், குமாரபாளையம் தாலுகாவில் 10 தேர்வு மையங்களில் 2,937 தேர்வர்களும் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். மாவட்டத்தில் மொத்தம் 174 தேர்வு மையங்களில் 51,433 தேர்வர்கள் போட்டி தேர்வினை எழுத ஹால் டிக்கட் பெற்றிருந்தனர்.
நேற்று காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் மையங்களுக்கு வந்தனர். 9.00 மணியுடன் தேர்வு மைய கதவுகள் பூட்டப்பட்டன. 9.30 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் தாலுகாவில் 1,420 பேரும், குமாரபாளையம் தாலுகாவில் 606 பேரும், மோகனூரில் 431 பேரும், பரமத்தி வேலூரில் 1,008 பேரும், ராசிபுரத்தில் 2,630 பேரும், சேந்தமங்கலத்தில் 856 பேரும், திருச்செங்கோட்டில் 2,186 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 10,137 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 41,278 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதுபவர்களின் சதவீதம் 80.28 ஆகும். மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள் மூலம் தேர்வு எழுதினார்கள். அனைத்து தேர்வு மையங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வர்கள் செல்ல வசதியாக தேர்வு மையங்களுக்கு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.