ரூ.4,24,368 மதிப்பிலான வேளாண் இடுபொருட்கள், வேளாண் கருவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
விவசாயிகளுக்கு பயிர் கடன்களை விரைந்து வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கும், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், அறிவுறுத்தல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் இன்று (25.07.2025) நடைபெற்றது. பின்னர் வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மண்புழு உரப்படுக்கை, உளுந்து விதை, உயிர் உரம், ரூ.19,050 மானியத்திலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு, பழச்செடிகள், வெங்காய கொட்டகை, ரூ.2,62,660 மானியத்திலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு விசை களையெடுக்கும் கருவி ரூ.1,42,658 மானியத்திலும் என 12 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4,24,368 மதிப்பிலான வேளாண் இடுபொருட்கள், வேளாண் கருவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பயனாளிகளுக்கு வழங்கினார். இக்கூட்டத்தில் ராமராஜன் பேசுகையில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க சிபில் ஸ்கோர் கணக்கீட்டு முறையை ரத்து செய்து பழைய முறையை கொண்டு வர வேண்டும் எனவும், கொட்டரை நீர்த்தேக்கத்தில் விவசாயிகளுக்கு மாற்று பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திரு.விசுவநாதன் அவர்கள் பேசுகையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து ஏரிகளின் வரத்து வாய்க்கால்களையும் சீரமைத்து தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரயில்வே திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திரு.ராஜாசிதம்பரம் அவர்கள் பேசுகையில் வீடு கட்டுவதற்கு கிராவல் மண்அடிக்க அனுமதி வழங்க வேண்டுமெனவும், பூமிதான நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திரு.ஜெயராமன் அவர்கள் பேசுகையில் மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏகே.ராஜேந்திரன் அவர்கள் பேசுகையில் கோனேரி ஆற்றுப்பகுதியில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து ராஜா பேசுகையில் ஏரிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திரு.நீலகண்டன் அவர்கள் பேசுகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணியாளர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், டான்பெட் உரக்கிடங்கிற்கு இணைப்பு சாலை அமைத்து, கிடங்கினை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திரு.ரமேஷ் அவர்கள் பேசுகையில் அரசின் திட்டங்கள் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், திரு.கருணாநிதி அவர்கள் பேசுகையில் லாடபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி முள்வேலிகளை அகற்றி சீரமைத்து தர வேண்டுமெனவும், திரு.விவேகானந்தன் அவர்கள் பேசுகையில் அரும்பாவூர் பேரூராட்சியில் மயான பாதை சுற்றுச்சுவர் பணிகளை தீவிரப்படுத்தவும், அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமெனவும், திரு.விநாயகம் அவர்கள் பேசுகையில் தெரணியில் உள்ள பை-ஏரி சீரமைத்து தர வேண்டுமெனவும், மயான பகுதியில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டுமெனவும், திரு.வரதராஜன் அவர்கள் பேசுகையில் சின்ன முட்லு அணை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், திரு.செல்லத்துரை அவர்கள் பேசுகையில் சின்ன வெங்காயம் மற்றும் மக்காச்சோளத்திற்கு மதிப்பு கூட்டு தொழிற்சாலை துவங்க வேண்டுமெனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திரு.மணிவண்ணன் அவர்கள் பேசுகையில் பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மிஷின் பயன்படுத்துவது தொடர்பாக பயிற்சி வழங்க வேண்டுமெனவும், கேட்டுக்கொண்டார். இதன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிபில் ஸ்கோர் சம்பந்தமாக விவசாயிகளுக்கு தெளிவுரையை திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் அவர்களும், கூட்டுறவுத்துறை அலுவலர்களும் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் கடன்களை விரைந்து வழங்கிட வேண்டும், போதிய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து மனுக்களுக்கும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோழிக் கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவுத் துறையில் உள்ள டிராக்டர் போன்ற வேளாண் இயந்திரங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். பின்னர் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி கழகம், சென்னை சார்பாக எஸ்.கல்பனா, முதுநிலை மேலாளர் அவர்கள் நிறுவனத்தின் முன்னெடுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், வேளாண் ஏற்றுமதி குறித்த திறன் பயிற்சி விவரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பொதுத்தகவல்கள் : பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2025 ஜூலை மாதம் பெய்ய வேண்டிய மழை அளவு 38.00மி.மீ., பெய்த மழை அளவு 2.64மி.மீ, ஆகும். 2025 ஜூலை வரை பெய்ய வேண்டிய மழை அளவு 195மி.மீ., பெய்த மழை அளவு 206.83 மி.மீ, ஆகும். விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல்லில் 87.230 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், சிறுதானியங்களில் 8.591மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், பயறு வகைகளில் 5.518 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், எண்ணெய் வித்து பயிர்களில் 10.083 மெ.டன்கள் இருப்பில் உள்ளது. தோட்டக்கலை துறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பரப்பு அதிகரித்தல், சிப்பம் கட்டும் அறை பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித் தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக்கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே.) பொ.ராணி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






