திருமழிசை ரூ.486 கோடியில் பிரமாண்ட பேருந்து நிலையம்.

திருமழிசை ரூ.486 கோடியில் பிரமாண்ட பேருந்து நிலையம்.

பேருந்து நிலைய வரைபடம்

திருமழிசை ரூ.486 கோடியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் பேருந்துகள் நிறுத்துவதற்காக புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.486.6 கோடி மதிப்பில் பிரமாண்ட பேருந்து முனையம் கட்டும் பணி நிறைவடைந்து நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை தொடங்கி வைத்தார்.

கிளாம்பாக்கத்தை போன்றே சென்னை பூந்தமல்லியை அடுத்து அமைந்து இருக்கும் திருமழிசை துணைக் கோள் நகரத்தின் அருகே கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்டவற்றுக்கும், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் பேருந்து இயக்கும் திட்டத்துடன் இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

70 அரசு பேருந்துகள், 30 தனியார் பேருந்துகள், 37 புறநகர் பேருந்துகள், 27 ஆம்னி பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையிலான பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது. இது அல்லாமல் சென்னை மாநகர பேருந்துகளை நிறுத்தும் வகையில் தனி பார்க்கிங் வசதி அமைக்கப்படுகிறது. அதில் 36 பேருந்துகளை நிறுத்தலாம். அதேபோன்று பேருந்து நிலைய தரை தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்களையும், 235 நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தும் வகையில் பிரமாண்ட பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக பேருந்துகளை பராமரிக்க பணிமனை வசதி, போக்குவரத்து பணியாளர்கள் தங்குவதற்காக 186 படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறை, 24 மணி நேர குடிநீர் வசதி, 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படுகிறது. பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக 3.75 ஏக்கர் பரப்பளவிலும், அருகில் உள்ள திறந்தவெளி பகுதியில் 2.5 ஏக்கரில் பசுமை பகுதியும், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்கு பிரத்யேக இடம், மழைநீர் வடிகால், உயர் அழுத்த மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புவழித் தடம், தாய்மார்களுக்கு என பாலூட்டும் அறைகள், மூன்றாம் பாலினத்தவருக்காக தனி கழிப்பறை வசதி, லிஃப்ட்டு மற்றும் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டுகள் வசதியுடன் இது அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருந்தார். 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதமே இது திறக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. இதன் பணிகள் தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் எழுப்பப்பட்ட கேள்விக்கு 50 சதவீத பணிகள் முடிய வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story