தஞ்சாவூரில் 2024 அக்டோபருக்குள் 4 ஜி சேவை
தஞ்சாவூரில் 2024 அக்டோபருக்குள் 4 ஜி சேவை
தஞ்சாவூரில், 2024 அக்டோபருக்குள் 4 ஜி சேவை வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தஞ்சாவூர் பொது மேலாளர் பால. சந்திரசேனா தெரிவித்தார்.
தஞ்சாவூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில், தஞ்சாவூர் வணிகப் பகுதியின் 2023 - 24 ஆம் நிதியாண்டுக்கான தொலைபேசி ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தலைமை வகித்து பேசுகையில், "பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. கிராமப்புற பகுதியிலும், இ-சேவை மையங்களிலும் பி.எஸ்.என்.எல். சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் கடும் உழைப்பு பாராட்டத்தக்கது" என்றார்.
பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் பால.சந்திரசேனா பேசுகையில், "தஞ்சாவூரில் 4- ஜி சேவை 2024, அக்டோபர் மாதத்துக்குள் வழங்கப்படும். அனைத்து அடிப்படை தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளும் எப்.டி.டி.எச். ஆக மாற்றப்பட்டு வருகிறது" என்றார். இதில், தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக துணைப் பொது மேலாளர் எஸ்.ராஜகுமார் வரவேற்றார். நிறைவாக, என்.அமுதா நன்றி கூறினார்.