உத்தமர் கோயிலில் 4ம் ஆண்டு பால்குட விழா

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உத்தமர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 4 ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வரால் பாடல் பெற்ற இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியை சித்ரா பௌர்ணமியாக வழிபடுகிறோம். இந்த நாளில் சிவ வழி பாட்டினை மேற்கொள்வது மிகவும் சிறப்பானதாகும். சித்ரா பௌர்ணமியில் வழிபாடு செய்வதால் மனக்கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் ஐதீகம். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பால்குட விழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் 4 ம் ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பால்குட விழா நடைபெற்ற்றது. இவ்விழாவையொட்டி அய்யன் வாய்க்கால் கரை விநாயகர் கோயிலிருந்து பால்குடம், பால் காவடி, அழகு குத்துதல் போன்றவை எடுத்து உத்தமர் கோயிலுக்கு ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர். அங்கு பிச்சாடனார் சன்னதியில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மகா தீபாதாரனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story