5 காட்டு யானைகளால் பரபரப்பு

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரகத்தில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.இந்நிலையில் தாளவாடி அடுத்த நெய்தாலபுரம் மலை கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் கரும்பு, மக்காச்சோளம், வாழைகளை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்கு தொந்தரவுகள் இருப்பதால் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நெய்தாலபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் 4 ஏக்கரில் கரும்புகளை பயிரிட்டு உள்ளார். நேற்று இரவு வழக்கம்போல அவர் காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 3 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதி விட்டு வெளியேறிய 5 காட்டு யானைகள் கூட்டம் நடராஜ் தோட்டத்துக்குள் புகுந்து கரும்புகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. திடீரென சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த நடராஜ் டார்ச் லைட்டை கொண்டு தோட்டத்தில் பார்த்தபோது காட்டு யானைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்து நடராஜ் கூச்சலிட்டார். அருகில் தோட்டத்தில் இருந்த விவசாயிகள் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானை கூட்டம் கரும்பு தோட்டத்தில் சுற்றி சுற்றி வந்தது. இது குறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் சம்பவ இடத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து விவசாயிகள் ஒன்றிணைந்து பட்டாசுகளை வெடிக்கும், அதிக சட்டங்களை எழுப்பியும் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 5 மணிக்கு அந்த 5 காட்டு யானைகளும் கரும்பு தோட்டத்திலிருந்து வெளியேறியது. கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட கரும்புகளை அந்த காட்டு யானைக்கூட்டம் மிதித்தும் தின்றும் சேதப்படுத்தி உள்ளது. கரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் யானைகள் சேதப்படுத்தி உள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி நடராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் தோட்டத்துக்கு வர வாய்ப்புள்ளதால் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
Next Story

