ரூ.5 லட்சம் கடன் தொகைக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சத் தொகையை வாங்கிய போது

X
நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சதீஷ்குமார் (24). இவர் ஒர்க் ஷாப் வைப்பதற்காக, மாவட்ட தொழில் மையத்தில், கடந்த 2024 -ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அத்தொகை, திட்டச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி சதீஷ்குமாருக்கு வழங்கப்பட்டது. இதில், ரூ.1.50 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது. இதை அடுத்து, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் அன்பழகன் (57), சதீஷ்குமாரின் கடன் தொகைக்கு ஒப்புதல் அளித்ததற்காக, ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். பணம் தர விரும்பாத சதீஷ்குமார், நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார். புகாரின்பேரில், டிஎஸ்பி மனோகரன் அறிவுறுத்தலின் பேரில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று சதீஷ்குமாருக்கு அறிவுரைகளை கூறி, மாவட்ட தொழில் மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சதீஷ்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் அன்பழகனிடம் கொடுத்தார். பணத்தை கையில் வாங்கிய அன்பழகன், கைவிரல்களில் ரசாயன பவுடர் ஒட்டியதை பார்த்ததும், கைகளை உதற முயற்சித்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று, அன்பழகனின் கைகளை பிடித்துக் கொண்டனர். இது குறித்து, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, ரூ.12 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து அன்பழகனை கைது செய்தனர். மேலும், போலீசார் அன்பழகனை சோதனை செய்த போது, அன்பழகன் தன் சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் ரூ.1.01 லட்சம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அப்பணத்தை கைப்பற்றிய போலீசார், அப்பணத்தை கொடுத்தவர்கள் யார் என்பது குறித்து தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

